விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயண ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 5000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோபாலபுரத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயண ஆலை இயங்கிவருகிறது. 1961ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் எனும் பெயரில் இந்த ஆலை நிறுவப்பட்டது. 1978இல் யூபி தொழில் குழுமத்தால் இந்த நிறுவனம் வாங்கப்பட்டு பின், 1997இல் தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ஆலையை வாங்கி அதற்கு எல்ஜி பாலிமர்ஸ் என்று பெயரை மாற்றியது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் ஆலை இன்று திறக்கப்பட்டது. அதிகாலை ஏற்பட்ட வாயுக்கசிவால், இந்த ஆலையை சுற்றி மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் இந்த வாயு கசிவால் சாலையிலேயே மயங்கி விழுந்தனர். அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள், கண் எரிச்சல், உடலில் அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: எடப்பாடி பழனிசாமி இல்லம் நோக்கி, 5 சிறுவர்கள் நடைப்பயண போராட்டத்தால் பரபரப்பு
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வாயு கசிவு காரணமாக ஐந்து கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு வெளியேறியதே, விபத்திற்கு காரணமென விசாகப்பட்டினத்தில் பணியாற்றும் ஆந்திரப் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
[su_carousel source=”media: 13435,13436″ limit=”100″ width=”700″ height=”700″ items=”1″ scroll=”4″ autoplay=”5100″ speed=”100″]
இச்சம்பவம் குறித்து ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி கூறுகையில்,”அதிகாலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. வேறு ஒரு ரசாயனத்தை பயன்படுத்தி இதன் பாதிப்பை குறைக்க முயன்று வருகிறோம். இதுவரை 90-95% கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், வாயுக்கசிவால் 1 to 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து எல்ஜி பாலிமர்ஸ் ஆலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.