இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து நயந்தாரா நடித்த ‘கொலையுதிர்காலம்’ படக்குழு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதாரவி நயன்தாராவை பற்றி பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கொலையுதிர் காலம் படம் கைவிடப்பட்ட படம் என்று ட்வீட் செய்தார். முடிக்கப்படாத படத்திற்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதே எங்களுக்கு தெரியாது. நிஜ தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர் சில ஆண்டுகளுக்கு முன்பே படத்தை விட்டு வெளியேறிவிட்டனர் என்று நினைக்கிறேன். என்ன பேச வேண்டும் என்று தெரியாத தேவையில்லாதவர்களை வைத்துக் கொண்டு தேவையில்லாத நிகழ்ச்சி என்று கூறியிருந்தார்.

விக்னேஷ் சிவன் கைவிடப்பட்ட படம் என்று கூறியதால் படத்தின் வியாபாரம் பாதித்துள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு முன்னால் கொலையுதிர் காலம் படத்தை வாங்கிக்கொள்வதாக சொன்ன வினியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டனர்.

படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதாக உறுதி அளித்த நிறுவனமும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டது. இதனால் படத்தின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்கும்படி விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்வது குறித்து இயக்குனர் சக்ரி டோலட்டி உள்ளிட்ட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.