இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டி20 ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
 
இதையடுத்து 191 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டாய்னிஸ் 7 ரன்களுக்கும், கேப்டன் ஃபிஞ்ச் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
 
இதைத்தொடர்ந்து, டிஆர்சி ஷார்ட்டும் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஆர்சி ஷார்ட் 28 பந்துகளில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
 
அதன்பிறகு களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டினார். இந்திய அணியால் நடு ஓவர்களில் விக்கெட் வீழ்த்தமுடியவில்லை. அதேசமயம், மேக்ஸ்வெல்லும் அதிரடியில் மிரட்டினார்.
 
இதன்மூலம், 19.4 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
சதமடித்து அசத்திய மேக்ஸ்வெல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்கள் குவித்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் 18 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை மேக்ஸ்வெல் தட்டிச் சென்றார்.