விகடன் பத்திரிகை குழுமம் அதிரடியாக 176 பேரை பணிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி விகடன் வழங்கிய விருதுகளை திருப்பி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகை துறையில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறது விகடன் குழுமம். இன்று இணையதளம், பல்வேறு செயலி என்று அதன் நிறுவனத்தை விரிவாக்கி இருக்கிறார்கள்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் விகடன் விருதுகள் திரை பிரபலங்களுக்கும் சினிமா இல்லாமல் சமுதாயத்தில் தொண்டு புரியும் விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து விகடன் குழுமம் விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது கரோனா நெருக்கடியால் அவர்கள் நிறுவனத்திலிருந்து ஒரே நாளில் 176 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது விகடன்.

மேலும் வாசிக்க: ‘Article 15’ பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்- அருண்ராஜா காமராஜ் கூட்டணி

இதனால் ஊழியர்கள் பலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஒரு பாரம்பரியமிக்க நிறுவனம் மூன்று மாத கால நெருக்கடிக்கு ஒரே நாளில் இத்தனை பேரை பணி நீக்கம் செய்யலாமா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்திற்காக பெற்ற சிறந்த திரைப்படம் , சிறந்த அறிமுக இயக்குனர் விருதை விகடன் குழுமத்திற்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள லெனின் பாரதி, “176 தொழிலாளர்களை மனசாட்சியின்றி பணிநீக்கம் செய்துள்ள @vikatan குழுமத்தைக் கண்டித்து மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்திற்கு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் & சிறந்த அறிமுக இயக்குநருக்குமான விருதையும் விகடன் குழுமத்திற்கே திரும்ப அனுப்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் காலா உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றிய திரைக்கதையாசிரியர் மகிழ்நன் ஏற்கெனவே விகடன் விருதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். மேலும் பல திரை பிரபலங்கள் பலர் விகடன் குழுமத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் இன்னொரு பக்கம் விகடன் ஓடிபி ஒன்றைத் தொடங்கி அதற்காக மூன்று கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.