சிக்கிம் மாநிலத்தை நேபாளம், பூட்டானுடன் சேர்த்து தனிநாடு என்று டெல்லி அரசு விளம்பரம் ஒன்றில் இடம்பெறச் செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

டெல்லி மாநில அரசு பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என பட்டியலிட்டிருந்தது. இதில் சிக்கிம் தனிநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கும் டெல்லி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். டெல்லி அரசின் இந்த பிழை கடுமையான கண்டனத்துக்குரியது. சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. டெல்லி அரசு இந்த பிழையை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்து சர்ச்சை

இதுகுறித்து உடனடியாக டெல்லி அரசுக்கு சிக்கிம் மாநில தலைமை செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நாங்கள் இந்தியாவின் குடிமகன் என்பதில் பெருமிதம் அடைகிறோம். உங்களது விளம்பரம் எங்களை காயப்படுத்திவிட்டது என சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இத்தகைய பிழைகள் சகித்துக் கொள்ள முடியாதவை என கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டதற்காக சிவில் டிபென்ஸ் இயக்குநரக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி ஆளுநர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.