இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், பொருட்களை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் அரங்கு ஒன்றை இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக ரிக்கார்டிங் ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அந்த அரங்கை காலி செய்யுமாறு ஸ்டுடியோ உரிமையாளர்கள் கூறி, அதை இளையராஜா மறுத்தார்.
இதுகுறித்த வழக்கு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், அங்கு இருக்கும் தன் பொருட்களை எடுக்கவும் அனுமதி அளிக்கக் கோரி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது பிரசாத் ஸ்டுடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என்றார்.
அவரின் வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமிப்பதாகவும் அவருடன் இளையராஜா, ஸ்டுடியோ உரிமையாளர்கள் செல்லலாம் என்றார். மேலும் இது தொடர்பாக இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு கூறினார்.
இதனையடுத்து நேற்று (டிசம்பர் 22) அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிரசாத் ஸ்டுடியோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நிபந்தனைகளுடன் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்கத் தயார்.
ஆனால் இளையராஜா ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு எங்களுக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தில் அவர் உரிமை கொண்டாடக் கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே இளையராஜாவுடன் வர வேண்டும்.
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அவர் வரும்போது ஸ்டுடியோவுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாக இளையராஜா தரப்பில் பிரமான மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இழப்பீடு கேட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகவும், பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கொண்டாட மாட்டேன் என்றும் இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று (டிசம்பர் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா தரப்பில் கூறியதை அடுத்து, இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், பொருட்களை எடுக்கவும் நீதிபதி அனுமதி அளித்து, பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் இளையராஜாவுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.