நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து “அநீதி” என்ற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், ‘ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்பட பலர் நடித்துள்ளனர். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, விஸ்வா மற்றும் ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

அநீதிக்குத் தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

GV Prakash @ Aneethi Short Film Screening Photos

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் கூறுகையில், “அநீதி ரொம்ப முக்கியமான குறும்படம். இந்தப்படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அதை வைத்துக் கொள்ளட்டும். அனிதாவின் உயிரை பறித்த நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை.

நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மரணிக்கும் சமயத்தில் அனிதாவின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்பதை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது என்னால் அறிய முடிந்தது. அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்தப்படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது” என்று ஜிவி.பிரகாஷ் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.