அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வு ஒன்றுக்கு 20 லட்சம் அபராதம் விதித்து, ரிபப்ளிக் டிவி நிபந்தனை அற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது பிரிட்டன் அரசு.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகள் பலவற்றுக்கு தொடர்ந்து மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் பலவற்றிலும் விரும்பத்தகாத வார்த்தைகள் இடம் பெறுவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுவரை இந்த குற்றச்சாட்டு இந்திய அளவில் இருந்த நிலையில், தற்போது ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியை குற்றம்சாட்டி சர்வதேச அளவில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவியின் இந்தி சேனல் ரிபப்ளிக் பாரத். இந்த தொலைக் காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி ‘பாரத் பூச்தா ஹே’ (பாரதம் கேட்கிறது) என்கிற விவாத நிகழ்ச்சி பிரிட்டனில் ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் நிலவுக்குச் சென்ற சந்திரயான் 2 விண்கலம் குறித்து அர்னாப் கோஸ்வாமியுடன் சில பிரபலங்கள் பேசியது ஒளிபரப்பானது. இதில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைப் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், அர்னாப் கோஸ்வாமி மற்றும் அந்த விவாதத்தில் பங்கெடுத்தவர்கள் பாகிஸ்தானியர்கள் குறித்தும், பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குறித்தும் இழிவாகவும், அவதூறாகவும் பேசத் தொடங்கினர்.

அவர்கள், “பாகிஸ்தானில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தீவிரவாதிகள். விளையாட்டு வீரர்களும் தீவிரவாதிகள்” என விமர்சித்துள்ளதாகப் பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

மேலும் அர்னாப் கோஸ்வாமி, “நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம். அவர்கள் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர்” எனக் கூறியுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜெனரல் சின்ஹா என்பவர் பாகிஸ்தான் மக்களை நாய்கள் எனவும் விரைவில் அவர்கள் ராணுவ தக்குதலை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகளை ஒளிபரப்பும் வேர்ல்ட் வைட் மீடியா நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை 20000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19.73 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. அத்துடன் இது குறித்து ரிபப்ளிக் டிவி நிபந்தனை அற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறிப்பிட்ட நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பப் போவதில்லை, மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாது என்றும், இந்த விதி மீறல் வேண்டும் என்றே செய்யப்படவில்லை என்றும் வேர்ல்ட் வைட் மீடியா பிரிட்டனின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறைக்கு அளித்த பதிலில் மன்னிப்பு கோரி உள்ளது.

தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்