வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளவும், மேலும் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, சீனாவில் விலங்குகளிடமிருந்து தான் மனிதர்களுக்குப் பரவியதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் தொற்று பரவ தொடங்கியபோது, வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவை சீனாவின் ஹாங்காங் நகரில் இருந்த 2 வளர்ப்பு நாய்கள். தற்போது வரை கொரோனா தொற்று விலங்குகளிடமும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, கடந்த ஆண்டு கொரோனா பரவலால் மூடப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கிய பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மீண்டும் பூங்கா செயல்படத் தொடங்கியது. சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்துள்ளனர்.
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 3 ஆம் தேதி நீலா என்கிற 9 வயதான பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த வாரம் இந்த சிங்கத்துக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், கொரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
இதனையடுத்து, சிங்கத்தின் சடலத்தின் மாதிரிகளை, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இதேபோல் மேலும் 9 சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்துள்ளது.
அவற்றின் மாதிரிகளும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. ஆய்வின் முடிவில், நீலா என்ற சிங்கம் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 9 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் தொற்று இருக்கிறதா என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை ஜூன்-9 வரை கைது செய்ய தடை- உயர்நீதிமன்றம்