நடிகை சாந்தினி அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் சாந்தினி. நாடோடிகள் உள்ளிட்ட சில படத்தில் நடித்துள்ளார். அண்மையில் நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதில், முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகார் தெரிவித்தார்.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி நேற்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்துள்ளதாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் இன்று (3-06-2021) மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஜூன் 09 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

நடிகை சாந்தினி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு