வடசென்னை அனல் மின் நிலையத்தில் சுமார் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் காணவில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,830 மெகாவாட்டும் மேட்டூரில் 1,440 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இவ்விரு அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி, ஒடிஷா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் நிலக்கரி திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டு, அனல் மின் நிலையங்களின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆகஸ்ட் 20 வடசென்னை அனல்மின் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. இது முதற்கட்ட ஆய்வு.

அந்த ஆய்வில், கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரையான இருப்பில், 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல், பதிவேட்டில் மட்டும் உள்ளது. இது, 31-03,2021 வரை பதிவேட்டில் உள்ள கணக்கீட்டின் அடிப்படையிலான வித்தியாசம்.

ரூ.85 கோடி மதிப்பிலான அந்த நிலக்கரி இருப்பில் இல்லாதது குறித்து, பதிவேட்டுக்கும், இருப்புக்கும் எப்படி இந்த வித்தியாசம் வருகிறது, இதில் என்ன தவறு நடந்திருக்கிறது என அடுத்த கட்ட ஆய்வுகளில் முழுவதும் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் உண்மை நிலை தெரியவரும்.

கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக குளறுபடிகளால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட மின்சார வாரியம் மீட்டெடுக்கப்பட்டு, இதுபோன்ற தவறுகள் களையப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் முன்னெடுக்கப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் சண்முகம், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏடி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, “நிலக்கரி விவகாரத்தில் யார் தவறு செய்தனர் என்று அமைச்சர் இதுவரை குறிப்பிடவில்லை. எனது மடியில் கனமில்லை என்பதால், வழியில் பயமில்லை.

நான் எதற்கும் பயப்படப்போவதில்லை. விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கலாம். அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் எவ்வித தவறும் நிகழவில்லை. திமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே, அதிமுக அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு- 2 பொறியாளர்கள் அதிரடி நீக்கம்