லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லட்சத்தீவின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்வர் வர்மாவை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் கோடா படேலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக மோடி அரசு நியமித்தது.

அப்போது முதல் பிரஃபுல் படேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக தொடர்ந்து அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக,

இஸ்லாமிய பழங்குடிகளின் விருப்ப உணவான மாட்டுக்கறிக்கு தடைவித்தது மட்டுமின்றி, பள்ளிகளிலும் அசைவ உணவிற்கு தடை,

100% மதுவிலக்கு அமலான லட்சத்தீவில், மதுவிலக்கை நீக்கி அரசு சார்பாக மதுக்கடை திறக்க உத்தரவு,

தீவுகளில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்தி, இதன் மூலம் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய அதிகாரம்,

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் தேர்தலில் நிற்க தடை,

லட்சத்தீவை பூர்வீகமாக கொண்டவர்கள் மட்டுமே தீவுகளில் நிலம் வாங்க முடியும் என்ற நிலவுரிமை சட்டத்தை தளர்த்தி, யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க வழிவகை செய்யும் சட்டங்களை இயற்றுதல்,

லட்சத்தீவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கலைத்துவிட்டு, குஜராத்தைச் சேர்ந்த Amul Corporation கம்பெனிக்கு பால் பொருட்களை விற்பனை செய்ய வழிவகை,

கடலோர மக்களின் குடில்கள் அகற்றம் போன்ற திட்டங்களை அமல்படுத்தினார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் படேல் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்தனர்.

லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியை திரும்பப்பெறுக; பிரதமர் மோடிக்கு வலுக்கும் கண்டனங்கள்

இந்நிலையில், லட்சத்தீவு அதிகாரி பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக்கோரி, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் முதல்வர் பினராயி விஜயன், “லட்சத்தீவில் பாஜக தனது நிகழ்ச்சி நிரலை நிலை நாட்டுவது மற்றும் பெருநிறுவன நலன்களை திணித்து செயல்படுத்துவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

எனவே,அந்த முயற்சியை தவிர்த்து லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் நிர்வாக அதிகாரியை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், லட்சத்தீவின் அமைதியை உருக்குலைக்கும் விதமாக காவி மயத்தையும், சங்பரிவார் திட்டத்தையும், கார்ப்பரேட் மயமாக்கும் திட்டங்களையும் செயல்படுத்தும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவை சூறையாடும் பாஜக மோடி அரசு; ட்ரெண்டிங்கில் #SaveLakshadweep