அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த மாநிலமும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
பிசிஆர் எனப்படும் விரிவான கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு காலதாமதமாகும். எனவே ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனையை செய்து 30 நிமிடங்களுக்குள் முடிவை கண்டறிய முடியும். இந்த கிட்கள் சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளித்தது மத்திய அரசு.
இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கண்டறிவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட ரேபிட் டெஸ்ட் பரிசோதனை முடிவுகள் தவறானதாக இருப்பதாக ராஜஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும் ரேபிட் கருவி குறித்து சந்தேகம் எழுப்பி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிங்கிர்கும் தகவல் கொடுத்து உள்ளது.
இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகுஷர்மா கூறுகையில், ரேபிட் டெஸ்ட் கருவியின் பரிசோதனை முடிவுகள் 90 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும், ஆனால் அது 5.4 சதவீதம் மட்டுமே இருந்தது. ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, சரியான நடைமுறையை பின்பற்றியே இந்த கருவிகளை பயன்படுத்தினோம். ஆனால் அந்த கருவி இன்னும் தரத்தை பூர்த்தி செய்யாததால் சோதனைகளை நிறுத்தியுள்ளோம்.
இந்த கருவியின் துல்லிய தன்மை பற்றி ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் மற்றும் மைக்ரோபயாலஜி துறையை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழு ஆய்வு செய்தபோது இந்த தகவல் தெரியவந்தது. அக்குழுவின் பரிந்துரைபடி, உடனடியாக ரேபிட் கருவி மூலமாக பரிசோதனை செய்வதை நிறுத்தி விட்டோம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை எங்கள் மாநிலத்தில் 168 பேருக்கு இந்த கிட் மூலமாக பரிசோதனை நடத்தி உள்ளோம். ஐ சி எம் ஆர் எங்களது குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டால் இந்த கருவிகள் அனைத்தும் திருப்பி அனுப்பி விடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரேபிட் டெஸ்ட் கருவி, தவறுதலாக ரிசல்ட் காட்டுகிறது என்று மேற்கு வங்க அரசு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த மாநிலமும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் கங்காதர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ பொருட்கள் தரமற்றவையாக உள்ளன என உலகின் பெரும்பாலான நாடுகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்தியாவிலும் மருத்துவ உபகரணங்களில், இதுபோன்ற தரமற்ற தன்மை கண்டறியப்பட்டுள்ளது பெரிதும் அதிர்ச்சியளிக்கிறது.