உலகப்புகழ் பெற்ற ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூனை இயக்கிய ஜீன் டைச் காலமானார். அவருக்கு வயது 95.

உலக அளவில் புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் ‘டாம் அண்ட் ஜெர்ரி’. ஒரு எலி மற்றும் பூனை இடையே நடைபெறும் மோதல்களை நகைச்சுவையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட இந்த கார்ட்டூனுக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் டாம் அண்ட் ஜெர்ரியை இயக்கிய இயக்குனர் ஜீன் டைச் திடீரென மரணமடைந்துள்ளார். அனிமேட்டர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

சிகாகோவில் 1924ல் பிறந்த ஜீன் டைச், முன்ரோ, ‘டாம் டெர்ரிஃபிக்’, ‘பாப்பாய்’ உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய இளம் வயதில் வட அமெரிக்காவில் ஏர்ஃபேர்ஸில் பணியாற்றிய டைச், ராணுவத்திலும் வேலை பார்த்திருக்கிறார். விமானம் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர் டைச்.

தொடர்ந்து இசை சம்பந்தப்பட்ட துறையிலும் பணியாற்றினார் டைச். 1955 ஆம் ஆண்டு அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கிய டைச், ‘சிட்னி தி எலிஃபண்ட்’, ‘க்ளிண்ட் க்ளாபர்’ உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

இதனை தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு டைச் சொந்தமாக அனிமேஷன் கம்பெனியை ஆரம்பித்து, விளம்பர படங்களை உருவாக்கி கொடுத்தார். பின்னர் 1960-ஆம் ஆண்டு டைச் உருவாக்கிய ‘முன்ரோ’ என்ற கார்ட்டூன், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

இந்நிலையில் இயக்குனர் ஜீன் டைச், பராகுவேவில் இருக்கும் தனது அபார்ட்மென்ட் வீட்டில் கடந்த வியாழக்கிழமை காலமானார். ஜீன் டைச் மறைவுக்கு உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது கார்ட்டூன் பார்த்து வளர்ந்தது பற்றி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.