கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் 3 நாட்களாக மலை பாறை இடுக்கில் சிக்கிய தன்னை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு முத்தம் கொடுத்து பாபு நன்றி தெரிவித்தார்.

கேரளாவின் மலம்புழா, சேரடு பகுதியை சேர்ந்தவர் ஆர்.பாபு (வயது 23). பாபுவுக்கு மலையேறுவதில் ஆர்வம் அதிகம். இதனால் அவர் நேற்று முன்தினம் (7.2.2022) 2 நண்பர்களுடன் பாலக்காட்டை அடுத்த சேரட் மலைக்கு சென்றார்.

3 பேரும் மலையேறினர். சிறிது தூரம் சென்றதும் அதில் இருவர் மட்டும் மேற்கொண்டு மலையேற முடியாமல் திரும்பி விட்டனர். ஆனால் பாபு மலை உச்சி வரை செல்ல வேண்டும் என்ற உறுதியில் மேற்கொண்டு பயணித்துள்ளார்.

ஆனால், அங்கிருந்து பாபு கால் இடரி கீழே விழ பாறைகளின் ஊடே இருந்த ஒரு இடுக்கில் சிக்கிக் கொண்டார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் பாபுவை மீட்க முடியவில்லை. பின்னர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத் துறை, பின்னர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் என திங்கள் மாலையில் இருந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. காலில் காயத்துடன், தண்ணீர், உணவு இல்லாமல் இருந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தார் பாபு. பாபு மலையின் இடுக்கில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீட்புப் பணியில் ராணுவத்தினரின் உதவியை கோரினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவ மீட்புக்குழு, முதலில் பாபுவிற்கு தண்ணீரும், உணவும் கொடுத்தது.

இன்று அதிகாலை முதலே மீட்புப் பணிகளைத் திட்டமிட்ட ராணுவத்தின் தெற்கு கமாண்ட் வீரர்கள் முதலில் அவரை கடலோர காவற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயன்றனர். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்ததால் அது சாத்தியப்படவில்லை.

பின்னர் கயிறு உதவியுடன் பாபுவை ராணுவத்தினர் மலை உச்சிக்கு தூக்கினர். உச்சியிலிருந்து 200 அடி கீழே இருந்த பாறை இடுக்கில் தான் பாபு சிக்கியிருந்தார். 40 மணி நேரத்திற்குப் பின்னர் பாதுகாப்பு கயிறு மூலம் பாபு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மலம்புழாவில் சேரட் மலையில் சிக்கியிருந்த இளைஞன் மீட்கப்பட்டதால் கவலைகள் ஓய்ந்துள்ளன. அவரது உடல்நிலையை மீட்டெடுக்க தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்கப்படும். மீட்புப் பணியை முன்னெடுத்த ராணுவ வீரர்களுக்கும், உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் தீ விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது அதனை ஒட்டி வன ஆர்வலர்கள் பலரும் இதுபோன்று ட்ரெக்கிங் செல்வோருக்கு அறிவுரை வழங்கினர்.

வனம் என்பது யாரும் சாகசம் செய்வதற்கான இடம் அல்ல. வனத்தை பொறுப்போடு அணுக வேண்டும். ட்ரெக்கிங் செல்லும்போது முறையான பயிற்சியும், அங்கீகாரமும் பெற்றவர்களுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.