கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் கைது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கடுமையாக எச்சரிக்கை விடுததுள்ளார்.

உயிர் காக்கும் மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.. மனிதம் மரித்துபோய்விட்டது என்று அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அர்ப்பணித்து மரணத்தை தழுவிய மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை.. சென்னையில் உயிரிழந்த ஆந்திர டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர், திருவேற்காடு பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மயானத்துக்கு சென்ற டாக்டரின் உடல் திரும்பவும் மருத்துவமனைக்கே திரும்பி வந்தது சரித்திரத்தில் நடக்காத ஒரு நிகழ்வு

அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடாவில் பணியாற்றி டெங்கு காய்ச்சலுக்கு பலியான மருத்துவர் ஜெயமோகனின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய கோவை சிறுமுகை அருகே உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற செய்திகள் பரவின.

தொடர்ச்சியாக சென்னையில் நரம்பியல் மருத்துவரின் மரணம், கீழ்ப்பாக்கம் இடுகாட்டிலேயே மக்கள் திரண்டு வந்தது அதிர்ச்சியை தந்தாலும், அடக்கம் செய்ய முயன்றவர்களை கற்களையும், கட்டைகளையும் கொண்டு தாக்கியது வேதனையை தந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 21 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில். கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிததுள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களை தாக்கியும், ஆம்புலன்ஸை சேதப்படுத்தி தொடர்பாகவும் 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. மேலும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.