நாட்டின் ராணுவ ரகசியத்தை ஒரு தனியார் பத்திரிகையாளர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறார் என்பது ஆபத்தானது. பாலகோட் மீது தாக்குதல் நடக்கும் முன்பே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்தது எப்படி என்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கினர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்கள் முன்பு இந்த தாக்குதல் நிகழ்வுகள் நடந்தேறின. இந்தியா காட்டிய அதிரடி தாக்குதலை தேர்தல் பிரச்சாரத்திற்கு உபோயோகித்து மத்திய பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது அந்நேரத்தில் சமூக வலைதளங்களில் மிகப் பெரிதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இந்தியத் தொலைக்காட்சிகளின் டிஆர்பி கணக்கீட்டை மேற்கொள்ளும் ‘பார்க்’ அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா இருவருக்கும் நிகழ்ந்த 500 பக்க வாட்ஸ்அப் உரையாடலை மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகை உடன் சேர்த்து தாக்கல் செய்துள்ளது.
அந்த வாட்ஸ்அப் உரையாடலில் சில தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அர்னாப் கோஸ்வாமி பாலகோட் மீது நடத்தப்பட்டத்தற்கு 3 நாட்கள் முன்பே பாலகோட் தாக்குதல் பற்றி மற்றும் பார்த்தோ தாஸ்குப்தாவிடம் பேசி இருப்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
அந்த உரையாடலில், புல்வாமா தாக்குதல் நமக்கு நல்லது என்று அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டு, இதற்கு பதிலடியாக இந்தியா மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் என்றும், அதன் மூலம் மறுபடியும் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு தாக்குதல் பெரியதாக இருக்கும் என்றும் அர்னாப் கோஸ்வாமி தனது வாட்ஸ்அப் உரையாடலில் தெரிவித்து உள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள், எப்படி ஒரு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளருக்கு முன்கூட்டியே தெரிய வந்தது என்ற அதிர்வலைகளை இந்த வாட்ஸப் உரையாடல் எழுப்பி உள்ளது.
[su_image_carousel source=”media: 21604,21605″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாலகோட் தாக்குதல் குறித்த தகவல்கள், தாக்குதலுக்கு முன்பு பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் தளபதி, விமானப் படை தளபதி, ராணுவத் தளபதி ஆகிய 5 பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
விமானப் படையைச் சேர்ந்த பைலட்டுகள் கூட கடைசி நேரத்தில்தான் இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்திருப்பார்கள். ஆனால் ஒரு பத்திரிகையாளர் முன்கூட்டியே அதை தெரிந்து வைத்திருக்கிறார் என்பது ஆபத்தானது. இது அரசு ரகசியத்தை வெளியிட்ட செயல். ராணுவ ரகசியத்தை யார் வெளியே சொன்னார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவர்கள் தங்களைத் தாங்களே நாட்டுப்பற்றாளர்கள் என்றும், தேசியவாதிகள் என்றும் கூறிக் கொள்கிறார்கள், ஆனால் இந்த செயல் ஒரு தேச விரோத செயல். இத்தகைய தகவல்களை அளிப்பது ஒரு குற்றச்செயல். இது இந்திய விமானப் படையும் அதன் விமானிகளையும் கடுமையான ஆபத்துக்கு உள்ளாக்குகிறது. இது நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்
புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் இறந்ததை, நல்லதுக்கு தான் என்று அர்னாப் கோஸ்வாமி கூறிய வார்த்தை சரியானது கிடையாது. தேர்தல் வெற்றி மட்டும்தான் அவர்கள் கண்களுக்கு தெரிந்து இருக்கிறது. இந்த அரசில் அங்கம் வகிப்பவர்கள் தங்களை தாங்களே தேசப்பற்று கொண்டவர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், நமது ராணுவ ரகசியங்களை வெளியே கசிய விட்டுள்ளது தேசப்பற்று கொண்டவர்கள் செய்யும் விஷயம் கிடையாது. இந்த தகவலை அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்தவர்கள் யார் என்று தெரிய வேண்டும் என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
அர்னாப் கோஸ்வாமி தேசத்துரோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம்; வைரலாகிறது வாட்ஸ்அப் உரையாடல்