ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பான விவகாரத்தில், கிண்டலடிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் போட்டது. ஆனால் கூடுதல் விலைக்கு வாங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
இந்த விவகாரத்தில் சீராய்வு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ரஃபேல் ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செய்தியை குறிப்பிட்டு, நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பதிவில், “இதேபோல் தான் எனது பள்ளிப்பருவத்தில் வீட்டுப்பாடமும் காணாமல் போனது. அதற்காக எனது ஆசிரியர் பிரம்பால் அடித்து, முட்டியிட செய்தார். இது அந்த காலம் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிறுவர்கள் வீட்டுப்பாடம் செய்யாமல், அந்த நோட் தொலைந்து போய் விட்டதாக பொய் கூறுவர்.
அதேபோல் மத்திய அரசும் ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்வதாக குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.