டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார் மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி (வயது 22) தேர்வு பெற்று உள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் இளம் வயதில் பெற்றவர்களைப் பறிகொடுத்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார் ரேவதி. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள ரேவதி, இதற்காக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் தனது வெற்றிப்பயணம் குறித்து செய்தியாளர்களிடம் ரேவதி கூறுகையில், எனக்கு மதுரை சக்கிமங்கலம், சொந்த ஊர். நான் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது தந்தை இறந்து விட்டார். 5 ஆம் வகுப்பு படிக்கும்போது தாயை பறி கொடுத்தேன். நானும், தங்கையும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்தோம்.

நான் 2 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு விடுதி மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்கி படித்தேன். 12 ஆம் வகுப்பு படிக்கும்போது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன். அப்போது நான் காலில் ஷூ இல்லாமல் ஓடுவதை பார்த்து பயிற்சியாளர் கண்ணன் எனக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வாங்கி கொடுத்தார்.

நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சக்கிமங்கலத்தில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தேன். அப்போது பயிற்சியாளர் கண்ணன் என்னை சந்தித்து, உனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறேன். படிப்பு கட்டணம், தங்குமிடத்துக்காக நீ பணம் எதுவும் கட்ட தேவையில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நான் அந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு சேர்ந்தேன். அப்போது எனக்கு இளைப்பு நோய் ஏற்பட்டது. இதன் காரணமாக நான் மிகவும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டேன். கல்லூரியில் முதலாமாண்டு படிப்பை கைவிட வேண்டி இருந்தது.

நான் மீண்டும் சக்கிமங்கலம் வீட்டுக்கு வந்து பைக் மெக்கானிக் கடையில் மறுபடியும் வேலை பார்க்க தொடங்கினேன். அப்போது கண்ணன் என்னை மீண்டும் சந்தித்து கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க உதவினார்.

நான் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகள், பதக்கங்களை பெற்றுள்ளேன். எனக்கு தென்னக ரெயில்வேயில் வேலை கிடைத்தது. இதன் மூலம் பாட்டி மற்றும் தங்கையை பராமரித்து வருகிறேன்.

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என் கனவாக உள்ளது. இதற்காக பாட்டியாலா முகாமில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். ஜப்பான் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே என் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார் வீராங்கனை ரேவதி.

போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல ஸ்பெல்கோ சார்பில் ரேவதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: போராளிகள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்படுகிறார்கள்