கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடுஎஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 02) விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை தொடங்கியது.

இன்றைய விசாரணைக்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடவியல் நிபுணர் ராஜ் மோகன், கோத்தகிரி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், 3 பேரும் ஆஜராகவில்லை.

விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொடநாடு வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த தடையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தனிப்படை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு