பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பொதுக் கூட்டத்திற்கு சென்றபோது, விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பிரதமர் மோடி சாலையிலேயே 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு, டெல்லி திரும்பியது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று (5.1.2022) பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்க இருந்தார்.

இதற்காக பஞ்சாப் சென்ற மோடி, பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு முன் ஹுசைனி வாலாவிற்கு ஹெலிக்காப்டர் மூலம் சென்று அங்குள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருந்தார். ஆனால் மழை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் வாகனம், ஹுசைனி வாலாவில் இருந்து 30 கி.மீ தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரதமர் செல்லும் வாகனம் 20 நிமிடங்கள் வரை சாலையிலேயே காத்திருந்தது.

இதனையடுத்து பஞ்சாப் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்பினார். இது பாஜகவினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் மோடியின் வருகை சரியாக திட்டமிடப்பட்டு பஞ்சாப் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பஞ்சாப் அரசு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இதனால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தானது. இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தது.

மேலும் பிரதமரை வரவேற்க பஞ்சாப் முதல்வர் விமான நிலையத்துக்குச் செல்லவில்லை என்பது குறித்தும் பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன. இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், “பிரதமரிடம் மோசமான வானிலை மற்றும் எதிர்ப்புகள் காரணமாகப் பயணத்தை நிறுத்துமாறு ஏற்கனவே கேட்டுக் கொண்டோம்.

அவரது திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பாதுகாப்பு குறைபாடு ஏதும் பிரதமர் வருகையின் போது இல்லை, நான் பிரதமர் மோடி இன்று பெரோஸ்பூர் மாவட்டத்திற்குச் செல்லமுடியாமல் திரும்பியதற்கு வருந்துகிறேன்.

எங்கள் பிரதமரை நாங்கள் மதிக்கிறோம், என்னுடைய செயலாளருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை செய்ததை அடுத்து, பிரதமரை வரவேற்க அமைச்சர் அனுப்பப்பட்டார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பாஜக கூட்டத்திற்கு 7000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் 700 பேர் மட்டுமே வந்தனர். எனவே இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சாலைமறியல் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டு ஜலந்தர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ட்ராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பெரோஸ்பூர் நோக்கி விவசாயிகள் திரண்டனர். விவசாயிகளை பெரோஸ்பூர் வரவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தால் மோடி பயணம் ரத்தானது குறித்து அறிந்த பாஜகவினர் அங்கு திரண்டு விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பில் பாஜகவினர் ஈடுபட்டதால் ஏராளமான விவசாயிகள் காயம் அடைந்தனர்.

பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பதின்டாவில் இருந்து டெல்லி திரும்பிய நிலையில், பஞ்சாபில் வன்முறை அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.