பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், காவல் டிஜிபி ஆகியோர் வரும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்க பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்குச் சென்றபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர் என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நட்டாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதில் என்னவிதமான குறைபாடு நடந்துள்ளது, நடந்த சம்பவங்கள் என்னென்ன, பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, கற்களை எறிந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 14 ஆம் தேதி மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், காவல் டிஜிபி இருவரும் நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநர் ஜெகதீப் அனுப்பிய மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பிறகும் , மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்ட பின்னணியில் பாகிஸ்தான், சீனா- சர்ச்சையில் மத்திய பாஜக அமைச்சர்