மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்று, அசத்தலான பந்துவீச்சால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (9.2.2022) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேலும் ரோஹித் – 5 ரன்கள், விராட் கோலி – 18 ரன்கள், ரிஷப் பந்த் – 18 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறைவான இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. சாய் ஹோப் மற்றும் பிராண்டன் கிங் இருவரும் துவக்கம் கொடுத்தனர். இருவரும், முதல் ஏழு ஓவர்களை வீசிய முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூரை எளிதாக சமாளித்து ஆடினார்.

அதன்பின் இளம்வீரர் பிரசித் கிருஷ்ணா தனது வேகத்தால் ஓப்பனிங் கூட்டணியை பிரித்தார். முதல் விக்கெட்டாக பிராண்டன் கிங் 18 ரன்களிலும், அடுத்து வந்த பிராவோவை 1 ரன்னிலும் பிரசித் அவுட் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். 27 ரன்கள் எடுத்த நிலையில் சஹால் ஓவரில் சாய் ஹோப்பும் வெளியேற மேற்கிந்தியத் தீவுகள் அணி நிலைகுலைந்தது.

இந்திய பந்துவீச்சாலர்களின் அசத்தலாக பந்து வீச்சால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஷமார் புரூக்ஸ் 44 ரன்னும், அகேல் ஹொசைன் 34 ரன்னும், ஷாய் ஹோப் 27 ரன்னும், ஒடியன் ஸ்மித் 24 ரன்னும் எடுத்தனர்.

இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்த கடந்த 11 ஒருநாள் தொடர்களையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.