பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் அணி மொத்தமாக தவிர்க்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகள் முகாமை அழித்து இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய கவுதம் காம்பிர், “புல்வாமா தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எல்லா வகையிலான போட்டியிலும் விளையாடுவதை இந்திய தவிர்க்க வேண்டும். உலகக்கோப்பை ஃபைனலில் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட அந்த போட்டியையும் தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானுடன் விளையாடி 2 புள்ளிகள் வாங்குவது முக்கியமல்ல. நாடு தான் முக்கியம். ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இக்காரணத்துக்காக கோப்பை வெல்லவில்லை என்றாலும், யாரும் இந்திய வீரர்களை தவறாக நினைக்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.