மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்மேற்கு பகுதியில் வசந்த் விஹாரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வந்தார். நேற்றிரவு நடந்த கொள்ளை முயற்சியின்போது கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் துணிகளை துவைத்து வந்த ராஜூ (வயது 24) என்பவர் தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜூவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி காவல்துறை தேடி வருகின்றனர். மேலும் குற்றம் நடந்த இடத்தில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் தொகுதி எம்பியாகி 1991 ஆம் ஆண்டு நீதித்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். 1993 ஆம் ஆண்டு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பிறகு பாஜகவில் இணைந்து வாஜ்பாயின் அமைச்சரவையில் எரிசக்தி துறை அமைச்சராக பதவி வகித்தார். திருச்சிராப்பள்ளி எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட ரங்கராஜன் குமாரமங்கலம் வாஜ்பாயின் இரண்டு ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றினார்.
தற்போது ரங்கராஜன் குமாரமங்கலம்-கிட்டியின் மகன் மோகன் குமாரமங்கலம் காங்கிரசில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு