கர்நாடகா, ஹரியானா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. ஒன்றிய பாஜக அரசு கொரோனாவை முறையாகக் கையாளவில்லை என பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா ஒருபுறம், விலைவாசி உயர்வு மறுபுறம் என ஒன்றிய பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அடுத்தாண்டு ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் இமேஜை உயர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. சில நாட்களில் பிரதமர் மோடியின் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சூழலில் கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் கோவா என மொத்தம் எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசியல் சாசனத்தின் படி குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். 5 ஆண்டுகள் கொண்டது இந்தப் பதவிக் காலம். அதன்பிறகு ஆளுநரை மாற்றுவது அல்லது அவரே தொடர்வதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். அந்த வகையில், எட்டு மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விவரம்:

* கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக ஒன்றிய அமைச்சர் தாவர்ச் சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா ஹரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மிசோரம் – ஹரிபாபு கம்பாம்பதி

* இமாச்சலப் பிரதேசம் – ராஜேந்திரன் விஸ்வநாத்

* மத்தியப் பிரதேசம்- மங்குபாய் சஹான்பாய் படேல்

* மிசோரம் ஆளுநராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* திரிபுரா கவர்னராக உள்ள ரமேஷ் பயாஸ், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ஹரியானா கவர்னராக இருந்த சத்யதேவ்நாராயண் ஆர்யா, திரிபுரா கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்குத் துணைநிலை ஆளுநராக யாரும் புதிதாக நியமிக்கப்படவில்லை. இந்தியாவிலேயே தற்போது தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் தான் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி என இரு மாநிலங்களுக்கு ஆளுநராகத் தொடர்கிறார்.

புதுச்சேரியில் வலுவான ஒரு பிடி இருக்க வேண்டும் என பாஜக கருதுவதாலேயே எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், புதுச்சேரிக்கு புதிய துணைநிலை ஆளுநரை நியமிக்காமல் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

உத்தராகண்ட் பாஜகவில் கோஷ்டி மோதலால் குறளிவித்தையான முதல்வர் பதவி