சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான தலைமைக் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை விவகாரத்தில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் அச்சத்துடனேயே நடந்தவற்றை சாட்சி சொன்னவர் காவலர் ரேவதி. இவர் கூறிய சாட்சி இந்த வழக்கில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை ரத்தம் சொட்ட சொட்ட விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும், லத்தி மற்றும் மேஜை மீது ரத்தக் கரை இருந்ததாகவும், ஆனால் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் காவலர் ரேவதி சாட்சியம் அளித்தார்.
இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், காவலர்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டனர். சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் காவலர்கள் 6 பேர் மீது கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை; ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ விசாரிக்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் உயர் அதிகாரிகளால் தனக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவலர் ரேவதி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையே பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஜூலை.02) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து காவலர் ரேவதியுடன் நீதிபதிகள் செல்போனில் பேசினர். பின்னர் பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் உத்தரவை அடுத்து அரிவான்மொழியில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டு வாயிலில் இரு காவலர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.