சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம் தான் மஞ்சப்பை; இது அவமானம் அல்ல. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம் என “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்க தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாளுக்கு நாள் பூமி அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடல் வாழ் உயிரினங்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய மாசு ஏற்படுத்துகிறது.
ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள்தான். ஆனால் அவை மக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும்.
இதனால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
ஆனால் வியாபாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் புழக்கத்தில் தான் உள்ளது. இதனால் தற்போது பிளாஸ்டிக் தடையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி உள்ளது.
இதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ‘மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று (23.12.2021) சென்னை கலைவாணர் அரங்கத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஏற்பாடு செய்திருந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன். மஞ்சப்பை கொண்டு வந்தால், ‘வீட்டில் ஏதாவது விசேசமா? பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்ட காலம் ஒன்று உண்டு.
அதன்பிறகு பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரிகம், மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் உருவானது. மஞ்சப்பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள். சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் கூட மஞ்சப்பையை கக்கத்தில் வைத்து ஒருவர் வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அழகான, விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தயாரித்து தங்களது போட்டிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை வாங்குவதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது மக்கள் மத்தியிலும் குறைந்து விட்டது.
அந்த மஞ்சப்பை தான் சுற்றுச் சூழலுக்கு சரியானது. அழகான, நாகரிகமான பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு பயணம் ஆகும்.
இன்றைய நாள் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அந்தளவுக்குச் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பது மனிதகுலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்துவது.
வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பிறந்தநாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பிரச்சனைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை என்பதை நான் வலியுறுத்திச் சொன்னேன்.
அந்த சுற்றுச்சூழலுக்கு மிகக் கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அதுதான் மண், நீர், காற்று என எல்லாவற்றையும் சீரழிக்கிறது.
பிளாஸ்டிகை மண்ணில் போட்டால் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இவற்றை தின்று இறந்து போகின்றன.
நீர் நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசுபடக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கடல்சார் உயிரனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு மடிந்து போகின்றன.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை எரிப்பதால் அதிலிருந்து டையாக்சின் வேதிப்பொருள் காற்றில் கலந்து, காற்று நஞ்சாகிறது. இதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பாதிப்புகள் எற்படுகின்றன.
இத்தனை பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் நிறுத்தியாக வேண்டும். இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, ஓர் இடத்தில் சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, போக்குவரத்து மூலம் எடுத்துச்செல்வது, விற்பனை செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
மக்கும் தன்மையுள்ள இயற்கைக்கு உகந்த மாற்று பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி செயல்படுவோரின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் அரசு செய்து வருகிறது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பல வகையிலும் விழிப்புனர்வு பிரச்சாரங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
பேரங்காடிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களான அறநிலையத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பசுமை குழுக்கள், தேசிய பசுமை படை, டாஸ்மாக் நிறுவனம் என அனைவரையும் அழைத்து ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருநகரங்களில் மண்டல மாநாடு நடத்தப்பட்டது. வாகன கண்காட்சி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
சிறு குறு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிட கடந்த 03.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.
அகத்தூய்மை வாய்மைக்கு! புறத்தூய்மை வாழ்வுக்கு! – என்ற வைர வரிகளை உருவாக்கிக் கொடுத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த வழியை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, சுற்றுச்சூழலைக் காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும்.
இயற்கையைக் காப்போம்.. இயற்கையோடு இணைந்து, இயைந்து காப்போம்.. இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்குக் முற்றுப்புள்ளி வைப்போம்.. மஞ்சப்பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை.
சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சப்பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.