தமிழ்நாட்டில் முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மழை கோட், பூட்ஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அதேபோல கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட சமயம் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டு வாரங்கள் பள்ளிகள் முறையாக செயல்படவில்லை.

தொடர் மழையால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது கற்றலில் மிகப்பெரிய இடைவெளியையும் ஒருவித அயர்ச்சியையும் உண்டாக்கியது. இதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு பாடப்புத்தகம் இன்றி, சீரடை, செருப்பு, புத்தகப்பை என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மழைக்காலத்தில் மாணவர்களுக்கு உதவும் வகையில், மழை கோட், பூட்ஸ் வழங்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, முழுமையாக பள்ளிக் கூடங்கள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கும் போதே இதையும் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவியர்கள் படிப்புக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை மாணவ-மாணவியர் படிப்புக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டம் தீட்டி செயலாற்றி வருகிறது.

ஏற்கனவே மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள் வழங்கப்படுவது போல் வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மழை கோட், கணுக்கால் வரையிலான பூட்ஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மழை கோட், பூட்ஸ் வழங்கப்படும்.

முழுமையாக பள்ளிக் கூடங்கள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கும் போதே இதையும் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.