சீனாவின் பெய்ஜிங் நகரில் திடீரென போர்க்கால எமர்ஜென்சி உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பரவத் தொடங்கியுள்ளது. இதுவும் மார்க்கெட்டில் இருந்து தான் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அறிகுறிகள் எதுவும் தெரியாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்தவகை வைரஸ். இதனையடுத்து பெய்ஜிங்கில் உச்சக்கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகின் பெரும்பாலான நாடுகளை தாக்கிய கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவத் தொடங்கியது. அந்நாட்டின் ஹூபேய் மாகாணத்தின் தலைநகரான வுஹானில் உள்ள கடல் உணவுகள் விற்கப்படும் சந்தையில் முதல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து படிப்படியாக உலகையே ஆட்கொண்டுவிட்டது.
தற்போதுவரை உலகம் முழுவதும் 78,10,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,30,133 பேராக உயர்ந்துள்ளது. அதேசமயம் 40,07,363 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா கட்டுப்படுத்துவதில் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையாக பரவிவிடும் என்று அஞ்சப்படுகிறது. முதல் அலைக்கே ஒரு நாடு கூட மிஞ்சவில்லை. இதில் இரண்டாவது அலை வந்தால் இந்த உலகம் தாங்காது என்று பலரும் அச்சப்படுகின்றனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மிகப்பெரிய மொத்த விற்பனை மார்க்கெட்டான ஷின்ஃபாடிக்கு சென்று வந்தவர்கள் 517 பேருக்கான மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனா தொற்றே இல்லாத நாடாக மாற்றிய பெண்மணி