தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் அதிரடியாக விலையை உயர்த்தி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் நிர்ணயம் செய்து வருகிறது.
தமிழக அரசின் ஆவின் போல பல்வேறு தனியார் நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
தமிழகத்தின் மொத்த பால் விற்பனையில் தனியார் பால் நிறுவனங்கள் 84 சதவீதமும், தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் 16 சதவீதமும் பகிர்ந்து கொள்கின்றன.
இதில் தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதிரடியாக பால் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் மூன்று முறை விலை ஏற்றம் செய்து அமல்படுத்தின. அதன்படி ஒரு லிட்டர் பால் விலை 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை உயர்ந்தது.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலை உயர்வு குறித்து தனியார் நிறுவனங்கள் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.2 முதல் ரூ.4 வரையிலும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4ம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பால் லிட்டர் ரூ.48ல் இருந்து ரூ.50க்கு விற்கப்படும். நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.52ல் இருந்து ரூ.56ஆக விற்பனை செய்யப்படும். கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.60ல் இருந்து ரூ.62ஆக விற்கப்படும். தயிர் லிட்டர் ரூ.58ல் இருந்து ரூ.62ஆக விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறுகையில், பால் விலை உயர்வு தேவையில்லாத ஒன்று. டாஸ்மாக் மது விற்பனைக்கு மட்டும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் ஆவின் பால் விற்பனைக்கும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். வருங்காலங்களில் அரசு அனுமதியின்றி யாரும் பால் விலையை உயர்த்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.