தமிழகத்தில் வருகிற 18ம் தேதி 39 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது.
இதை தொடர்ந்து, காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் 10ம் தேதி டெல்லியில் அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2வது கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அப்போது தமிழகத்தில் உள்ள 39 மக்களவை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதி என 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினமே, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கடந்த மார்ச் 21ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து சூலூர் தொகுதியும் காலியானதாக தமிழக அரசின் சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
அதனால், தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிக்கும் தற்போது நடைபெறும் தேர்தலுடன் சேர்த்தே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் நேரடியாக மனு அளிக்கப்பட்டது. வழக்கை காரணம் காட்டி இங்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் திமுகவினர் அறிவித்தனர்.
மேலும், உச்ச நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் இந்த 4 தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், உரிய நேரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டது.
ஆனால், அதிமுக சார்பில் இந்த 4 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால், ஆட்சி கவிழும் என்ற ஆபத்து உள்ளதால் மறைமுகமாக தேர்தல் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் இது குறித்து தமிழக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையர்கள் கடந்த 3ம் தேதி சென்னை வந்தனர்.
அவர்களிடமும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேரில் சந்தித்து தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும், ஏப்ரல் 18ம் தேதி நடத்த முடியாவிட்டாலும் நாட்டில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் ஏதாவது ஒரு தேதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்திய தேர்தல் ஆணையமும், இடைத்தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல பதில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்த பரபரப்பான சூழலில், தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மே 19ம் தேதிதான் 7வது கட்ட (இறுதிகட்ட) தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு, கோவா, கர்நாடகாவில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், 2017ம் ஆண்டு கோவா முதல்வராக பொறுப்பேற்றார். அவர் எம்எல்ஏ ஆவதற்காக பனாஜி தொகுதி பாஜ எம்எல்ஏ சித்தார்த் குன்கோலிங்கர் ராஜினாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் பாரிக்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி அவர் இறந்தார்.
இதேபோல், கர்நாடகாவின் குந்தகோலா சட்டப்பேரவை
தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏ.வாக இருந்த சி.எஸ்.சிவஹள்ளி கடந்த மார்ச்சில் மாரடைப்பால் உயிரிழந்தார். காலியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 2 தொகுதிகளுக்கும், மே 19ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதை போலவே தமிழ்நாட்டில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தொகுதியில் போட்டியிடுபவர்கள் வருகிற 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 30ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மே 2ம் தேதி மாலை வரை
வேட்புமனுக்கள் வாபஸ் பெறலாம்.
அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி இந்த தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அது இந்த தேர்தல் வரை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தொகுதியுடன், காலியாக உள்ள 22 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை திமுக கூட்டணியில்உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
ஏற்கனவே அனைத்து கருத்து கணிப்புகளும் அதிமுக வுக்கு பெருந்த தோல்வியை தரும் என்று கூறிய நிலையில் , மேலும்,மிச்சம் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இது அதிமுகவினரை மிகவும் பாதித்து உள்ளதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளே நமது நிபருரிடம் தெரிவித்தனர்