குஜராத்தைப் போல் கர்நாடக மாநிலத்திலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படும் என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்து உள்ளார்.

குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க குஜராத் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. பகவத் கீதையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று குஜராத் கல்வித்துறை அமைச்சர் ஜிது வகானி தெரிவித்துள்ளார்.

பகவத் கீதையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடையே அது குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கடந்த சில தினங்கள் முன்பு குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “இந்தியாவின் கலாச்சரம், பழங்கால வரலாறு, நமது பாரம்பரியம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்த நூல் இருப்பதால், அதை பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக குஜாரத் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவின் கலாச்சாரம் அறிவாற்றல், பழம்பெருமை ஆகியவற்றை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் இடையே புனிதமான கருத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பகவத் கீதையின் மதிப்புகள், கோட்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் என்பவை எல்லா மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 6 ஆம் வகுப்பில் இருந்து கீதை தொடர்பான பாடங்கள் கற்றுத்தரப்படும்.

ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தில் கீதையின் பல்வேறு பகுதிகள் இடம்பெறும். அதன் சாராம்சங்கள் இடம்பெறும். இதன் மூலம் கீதை மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும்” என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

இது குஜராத் மாணவர்களை நல் வழியில் சிந்திக்க வழி வகுக்கும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி தெரிவித்துள்ளார். குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் அரசு பள்ளிப் பாடத்திட்டத்தில், பகவத் கீதையை சேர்க்க கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்து உள்ளார்.

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை அறநெறி அறிவியல் பாடத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை தயாராகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் கூறியதாவது, “பள்ளி மாணவர்களுக்கு அறநெறி பாடத்தின் கீழ் பகவத் கீதையை கட்டாயமாக்குவது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.

நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதால் குழந்தைகளின் பாடத்திட்டத்தில் அறநெறி அறிவியலை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும்போது அறநெறி அறிவியல் வகுப்புகள் வாரம் ஒருமுறை நடத்தப்பட்டன. வரும் நாட்களில் மாநில பாடத்திட்டத்தில் இதை ஏற்க முடியுமா என பார்க்கலாம்.

எல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டால் கல்வி நிபுணர்களைக் கலந்தாலோசித்து தார்மீக அறிவியல் பாடத்தின் அம்சங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து முடிவு செய்வோம். வகுப்பின் கால அளவும் நிர்ணயிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் தடை விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளநிலையில், தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கும் பாஜக அரசின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.