செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக சந்திரசேகரனை நியமித்ததற்கு மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னையை செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. லோக்சபாவிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன்.1 ஆம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பதிவில், திரு ஆர். சந்திரசேகரன் அவர்கள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

மேலும் வாசிக்க: செம்மொழி தமிழுக்குள் பாஜக அரசியலை திணிக்கிறதா வலுக்கும் எதிர்ப்பு

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்க எந்த வகையிலும் உதவாது என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், செம்மொழி தமிழாய்வு மையத்தின் இயக்குநராக சந்திரசேகரனை நியமித்துள்ளதற்கு நன்றி. தமிழை வளர்க்கும் மத்திய அரசின் முயற்சிக்கு நன்றி என கூறியுள்ளார்.

இந்த கடிதத்திற்க்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநர் நியமனம் குறித்த விமர்சனங்கள் இருக்கும் போது ரஜினிகாந்த் இதை பாராட்டியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.