ஜெய்பூர்- டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் டெல்லி நோக்கி செல்ல முயன்ற ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளனர்.

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 6ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இந்நிலையில் இன்று 7 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக வலியுறுத்தியுள்ளனர். மேலும், இன்று பேச்சுவார்த்தையில், முடிவு எட்டப்படவில்லை என்றால் 6 ஆம் தேதி முதல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகை முற்றுகை, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே ஹரியானா மாநில விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஜெய்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாக டெல்லி நோக்கி நேற்று (ஜனவரி 03) சென்றனர்.

அப்போது ஹரியானா மாநிலம் ரெவாரி அருகே அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும் விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறி சென்றதால், தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் இருந்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் மேற்கொண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

அப்போது கண்ணீர் புகை குண்டு விழுந்ததில் ஒரு டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது. அதில் அந்த டிராக்டர் பலத்த சேதம் அடைந்தது. இதனிடையே போராட்ட களத்தில் குளிர், மழை, பனி மற்றும் தற்கொலை காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டம் எதிர்ப்பு; டெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை