நடிகர் மாதவன் சுதந்திர தினம், ஆவணி அவிட்டம் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகியவற்றை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படத்தில் இந்து கடவுள் அருகில் சிலுவை இருப்பதைக் குறிப்பிட்டு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நடிகர் மாதவனின் புகைப்படத்தில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு நடுவே சிலுவையும் இருந்தது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய ஒருவருக்கு, ‘இந்த புகைப்படத்தில் இந்து கடவுள்களின் அருகில் சிலுவை உள்ளதே, அது ஏன்., கிறிஸ்துவ தேவாலயங்களில் இந்து கடவுள்களின் படங்கள் உள்ளதா.. நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம் என பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த மாதவன், ‘உங்களை போன்றவர்களின் கருத்துகளுக்கு பதில் தரவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. உங்களிடமிருந்து நான் மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் நீங்கள் முதலில் சரியான மனநிலையில் இல்லை. நல்ல வேளை அந்தப் புகைப்படத்தில் உள்ள பொற்கோயில் படத்தைப் பார்த்துவிட்டு சீக்கியராகிவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பாதது ஆச்சரியமாக உள்ளது.
புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் பொருட்களில் பாதி நான் வாங்கியவை மீதி எனக்கு பரிசாக வந்தவை. எனக்கு சிறுவயதிலிருந்து எம்மதமும் சம்மதம் என்று கற்று கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய மகனையும் அதுபோலவே வளர்த்து வருகிறேன். எனவே நான் என்னுடைய மதத்தை எப்படி மதிக்கின்றோனோ அதேபோல் அனைத்து மதங்களையும் மதிப்பேன்.
நான் தர்கா, குருதுவரா மற்றும் சர்ச் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்துள்ளேன். அந்த இடங்களில் எல்லாம் எனக்கு நிறையவே அன்பு கிடைத்துள்ளது. எனவே இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு தான். அந்த அன்பையும் அமைதியையும் நான் உங்களுக்கும் தருகிறேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். மாதவனின் இந்த பதிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.