தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கலைஞானத்துக்கு, பாரதிராஜா தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கோபமாக பேசி அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளார்.

1980 -90களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகள் கொண்டவர். பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட இயக்குனர்களின் நெருங்கிய நண்பரான இவர், சினிமா துறையில் அரை நூற்றாண்டை கடந்த தன் அனுபவங்களை ஒளிவு மறைவின்றி ‘சினிமா சீக்ரெட்’ என்ற புத்தக வடிவில் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான இது நம்ம ஆளு படத்தில் பாக்யராஜ், இவரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இவர், திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை பெருமைப்படுத்தும் நோக்கில் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பாக்யராஜ், சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் அமீர் உள்பட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் கலைஞானத்தின் வாழ்க்கை கதையை சுவைப்பட பேசினார். மேலும் ரஜினியை கலைஞானம் எப்படி சூப்பர் ஸ்டாராக்கினார் என்றும் கூறினார். சிவக்குமார் பேசிக்கொண்டிருக்கும் போது பின்னனியில் சிலர் பேசிக்கொண்டிருக்க, திடீரென கடுப்பான சிவக்குமார் அவர்களை பேச்சை நிறுத்தி திட்டினார். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இறுதியாக பேசிய ரஜினி என்னை ஹீரோவாக்கியவர் கலைஞானம். நான் தயங்கியபோதும் என்னை ஊக்கம் தந்து ஸ்டாராக்கினார். எப்போது கேட்டாலும் சிரித்துக் கொண்டே நல்லாருக்கேன் என்று சொல்பவர். அவர் அதற்கு பின் என்னை நடிக்க கேட்கவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை.

இப்போது அவர் வாடகை வீட்டில் வசிப்பது இங்கு சொல்லித்தான் தெரியும். மிகுந்த வருத்தம் அடைந்தேன். சிவக்குமார் மூலம் இது நடக்க இருக்கிறது. அவருக்கு நன்றி அவருக்கு வீடு தரும் பாக்கியத்தை அரசுக்கு தர மாட்டேன். அவர் மூச்சு என் வீட்டில் பிரிய வேண்டும். பாக்யராஜ் அவர்களே நாளையே அவருக்கு பிடித்த நல்ல வீட்டை பாருங்கள். இது நான் அவருக்கு செய்யும் கடமை என்று பேசி முடித்தார். ரஜினியை பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர் கலைஞானம் என்பது குறிப்பிடத்தக்கது.