சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் “அயோக்யா”. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் ஜீப் ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் விஷால் கையில் பீர் பாட்டில் வைத்து இருந்த காட்சி சர்ச்சையை உண்டாக்கியது. இந்த போஸ்டருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன் சர்க்கார் பட போஸ்டரில் விஜய் கையில் சிகரெட்டை வைத்தபடி போஸ் கொடுத்தது அதிக விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் சர்ச்சை ஏற்படும் எனத் தெரிந்தும் விஷால் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார்.

படங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வைப்பது, ஹீரோவை தம்மடிக்க அல்லது மது அருந்த வைப்பது எல்லாம் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அத்தகைய விமர்சனங்கள், கண்டனங்கள் படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து விடுகிறது.

கையில் பீர் பாட்டிலை வைத்திருந்தால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது விஷாலுக்கு தெரிந்தும் இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த அளவுக்கு இறங்கி வந்து இலவச விளம்பரம் தேடி தான் படத்தை ஓட வைக்க வேண்டுமா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழ் ராக்கர்ஸை சர்ச்சையில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அயோக்யா பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.

நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.