பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். சுமார் 200 ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடந்த இந்த தேவாலயம் 12ம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
 
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் இடமாகவும் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.
 
18ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் புரட்சி, 1944ல் இரண்டாம் உலகப் போர் என பல்வேறு இக்கட்டான தருணங்களையும் கடந்து இந்த தேவாலயம் கம்பீரமாக கட்சி அளித்தது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது.
 
இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், தேவாலயத்தின் மேற்கூரை வரை செல்ல உயரமான மரக்கம்புகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
 
இதன் காரணமாக, தீ மளமளவென பரவியது. 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேற்கூரை முழுவதும் பரவிய தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறியது. இதை பாரீஸ் நகர மக்கள் சோகம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்தனர். இதில், தேவாலயத்தின் கோபுரம் கருகி விழும் காட்சிகளை பார்தவர் கண்களை சோகத்தில் ஆழ்த்தியது
 
சுமார் 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
ஆனால் அதற்க்குள் தேவாலய கோபுரம் மற்றும் மேற்கூரை முழுவதுமாக நாசமாகி உள்ளது.
 
2 மணி கோபுரங்களும், தேவாலாயத்தின் பிரதான கட்டமைப்பையும் காப்பாற்றி இருப்பதாக தீயணைப்பு துறை தலைவர் ஜீன் கிளாட் கேலட் கூறி உள்ளார். தீ விபத்து குறித்து அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறுகையில், ‘‘இந்த தேவாலயம் நாட்டின் ஆத்மா. அதை பழயை நிலைக்குக் கொண்டு வர முயற்சி எடுக்கப்படு்ம்’’ என்றார்.
 
நேட்ரே டாம் தேவாலயம் தீயில் சேதமடைந்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், ‘நோட்ரே டேம் தீ விபத்தை பார்ப்பது கொடூரமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.
 
மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித இடமான வாடிகனும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெலும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. புனரமைப்பு பணியால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
 
இதற்கிடையே, தேவாலயத்தை மீண்டும் கட்ட தனது பங்காக ரூ.750 கோடியை தருவதாக பிரான்ஸ் தொழிலதிபர் அறிவித்துள்ளார்.