நடிகை சாந்தினி அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், முன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன், தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 5 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்தார் என்றும், மூன்று முறை தன்னை கருகளைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை சாந்தினி தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது, திருமணம் செய்துகொள்வதாக தொடர்ந்து ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்ததாகவும் தெரிவித்த சாந்தினி, தன்னை அந்தரங்கமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும், தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பான வாட்ஸப் உரையாடல் மற்றும் வீடியோ ஆடியோ ஆதாரங்களை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த புகார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் பெயரில், 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், 323 – அடித்து காயம் ஏற்படுத்துதல்,

417 – நம்பிக்கை மோசடி, 376 – பாலியல் வன்கொடுமை, 506 (1) – கொலை மிரட்டல், 67(a)- தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் கேட்டபோது, அந்த பெண் யாரென்றே தனக்கு தெரியாது. புகைப்படங்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என அந்தக் கும்பல் மிரட்டியது. அப்போதுதான் அவர்கள் பணம் பறிக்கும் கும்பல் என்பதை அறிந்தேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னால் அமைச்சர் மணிகண்டனின் விசாரணை நடத்த சென்றபோது, அவரது வசிப்பிடம் பூட்டப்பட்டு இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைக்கு பயந்து முன்னால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்