உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் பாலசுப்ரமணியம் (வயது 74), அவரது சகோதரர் சரவணன் (வயது 70), அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு எடுத்துள்ளார். அதன்படி ஒரு பெட்டியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த வைத்த ஊழியர்கள், மறுதினம் அதை பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.

இந்நிலையில், மறுதினம் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. இது குறித்து சரவணன் மற்றும் குடும்பத்தாரிடம் கேட்டபோது, ‘அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்’ என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே.. என்று காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

[su_image_carousel source=”media: 17878,17879″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, பாலசுப்ரமணியகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமார் கூறுகையில், “பாலசுப்ரமணியத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அலட்சியமாக முதியவரை கையாண்டது தொடர்பாகவும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 287, 336 ஆகியவற்றின் கீழ் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், பாலசுப்ரமணியம் உயிரிழந்ததையடுத்து சந்தேகத்திற்குரிய மரணம் என்ற அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 174 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதியவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தபின்னர், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: இலங்கையில் பிறந்தது எனது தவறா… முத்தையா முரளிதரன் ஆதங்கம்