மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பதால், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும், மின் விநியோகத்தை தனியாருக்கு விடும் சட்டத்தையும் கைவிடாவிட்டால், காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இரண்டு நாள் நாடாளுமன்றம் முற்றுகைப் போராட்டத்தை நடத்த முறையாக விவசாயிகள் அனுமதி கோரியும் அது வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மத்தியப் படையைக் குவித்து, டெல்லி எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைக்க முயற்சித்தனர். அடக்குமுறைகளை, மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாயிகள் முன்னேறினர்.
வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
இந்நிலையில் விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் சட்டம் ஒழுங்கை பராமரித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர். டெல்லி போராட்டத்தில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும் கலந்துகொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், வரும் டிசம்பர் 3 ஆம் தேதி மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.