தனது தாயாரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி போட்டியிடும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
 
அரசின் பல்வேறு துறைகளில் 22 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பிரதமர் மோடிக்கு விருப்பமில்லை. அவர் தனது நண்பர்களுக்கு உதவுவதிலேயே கவனம் செலுத்துகிறார்.
 
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அடுத்த ஓராண்டில் 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். அதுமட்டுமன்றி ஊராட்சிகளில் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
 
ரேபரேலியில் விவசாயி ஒருவர் வங்கியில் ரூ.20,000 கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை என்றால் சிறையில் அடைக்கப்படுகிறார்.
 
அதே சமயம், வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோர் சிறையிலா இருக்கிறார்கள்?
 
ஆகவே, இந்த ஆண்டில் இருந்து வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்துக்காக விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள்.
 
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் கொண்டுவரப்படும். அதில், விவசாய விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, புயலால் சேதம் ஏற்பட்டால் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை, பயிர்க் காப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.
 
ஊழலை ஒழிப்பதாகவும், கருப்புப் பணத்தை ஒழிப்பதாகவும் பொய்சொல்லி ஏமாற்றி உங்களிடமும், என்னிடமும் இருந்த பணத்தை பிரதமர் மோடி பறித்து விட்டார். அந்தப் பணத்தை அவர் தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்து விட்டார். அதன் பிறகு, பணத்துக்காக வங்கிகளின் வாசல்களில் நீண்ட வரிசையில் மக்கள் பரிதவிக்க நேர்ந்தது.
 
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பும், கப்பார் சிங் வரி விதிப்பும் (ஜிஎஸ்டி) கடந்த 70 ஆண்டுகளில் யாரும் செய்யாத மூடத்தனமான செயல். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மக்கள் பொருள்கள் வாங்குவதை நிறுத்தி விட்டனர்.
 
தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. இதனால், பலருக்கும் வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது. எனவே, காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்புத் திட்டம் (நியாய்) மீண்டும் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும். நன்றாக சிந்தித்தே இந்த வாக்குறுதியை அளித்துள்ளோம். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வீதம், 5 ஆண்டுகளுக்கு ரூ.3.6 லட்சம் கொடுக்க முடியும் என்றார் ராகுல் காந்தி.