விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பஞ்சாபி நடிகர் சித்து உள்ளிட்ட பலருக்கு எதிராக தேசிய புலானாய்வு முகமை (NIA) வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 9 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், சட்டங்களை திரும்பப்பெறுவதை தவிர்த்து மற்ற எந்த உடன்பாடுக்கும் மத்திய அரசு தயார் என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் உறுதியாக தெரிவித்துவிட்டார்.
இதுகுறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையே வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று 1 லட்சம் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என தெரிவித்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டரில் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரித்து, அவர்கள் மீது பல்வேறு சட்டங்களை ஏவி மிரட்டி வருகிறது பாஜக மோடி அரசு. அதில் மக்கள் பலனுக்கான நீதி சொஸைட்டி எனும் விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிர்சா உள்ளிட்ட பலருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சம்மன் அனுப்பியுள்ளது.
அதேபோல் பிரபல பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்துவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பஞ்சாப் திரையுலக ரசிகர்களின் அபிமானம் பெற்ற சித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்தது பெரும் வரவேற்பை பெற்றது. அவருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சித்து, கடந்த 2019 மக்களவை தேர்தலில் பஞ்சாபில் பாஜக சார்பாக போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்திருந்தார். தற்போது, பாஜக அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்ததால் சித்துவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நடிகர் சித்து கூறுகையில், “இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. போராட்டத்தை ஒடுக்க இதுபோல் பல்வேறு வகை மிரட்டல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. என்ஐஏவின் இந்த சம்மனை விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பங்காக எண்ணி எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று தேசிய புலானாய்வு முகமை, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும், விவசாயிகள் போராட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய தொடங்கி உள்ளதற்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
குடியரசு தினத்தன்று 1 லட்சம் டிராக்டர் பேரணி; டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்