கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சில மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார மையம் பரிந்துரை செய்திருந்தது. உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை பெரும்பாலான நாடுகள் கடைபிடித்து வந்தன. வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப உலக சுகாதார மையம் பரிந்துரைகளில் மாற்றம் செய்து வந்தது.

கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோய் தடுப்பு மருந்து இல்லை என்று கூறப்பட்டாலும் அதன் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்திய அளவில் தினசரி பாதிப்பில் முதல் 5 இடத்திற்குள் இருக்கும் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர். ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து அல்ல என வல்லுனர்கள் கூறிய போதிலும், மக்கள் அதை செவி கொடுத்து கேட்கவில்லை. ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை எந்தவொரு ஆதாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. ஏற்கனவே, 2020 நவம்பரில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் ரெம்டெசிவிர் மருந்தால் இறப்பு குறைவதோ, வென்டிலேட்டரின் அவசியம் குறைவதோ இல்லை என்றும், உடல்நலம் தேறுவதில்கூட இந்த மருந்துக்கு பங்கில்லை என ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாகக் கூறியது.

இருந்தபோதும், இந்த மருந்து தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு சமீபத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்து மற்றும் சிகிச்சைக்கான நெறிமுறைகளை வெளியிட்டபோது, அதில் இந்த மருந்து இடம்பெறவில்லை.

ரெம்டெசிவிர் மருந்தால், தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், இந்த மருந்தால் சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய துடிப்பு குறைவது ஆகியவையும் ஏற்படலாம். ஏற்கனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயத் துடிப்பும் குறையுமானால் அவர் அபாயநிலையை அடையலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த மருந்தால் கொரோனாவுக்குப் பலனளிக்கிறதா என்பது குறித்து இதுவரை செய்யப்பட்ட சோதனைகளில் சாதகமான முடிவுகள் ஏதும் கிடைக்காத நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தது. தற்போது உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு அறிவித்தால் இந்தியாவில் இனிமேல் ரெம்டெசிவிர் மருந்து பயன்பாட்டிற்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்டவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: பாஜக அரசின் அவலம்