திமுக தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகிவிட்டு என்னை நேரில் வந்து சந்தியுங்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று (4.3.2022) நடைபெற்றது.
முன்னதாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர், திமுக சார்பில் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.
அதன்படி இன்று நடந்த மறைமுக தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். சில இடங்களில் திமுக தலைமைக் கழகத்தின் அறிவிப்பை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடங்களில் திமுக உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், “மறைமுக தேர்தலில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகவேண்டும். உடனடியாக பொறுப்பை விட்டு விலகிவிட்டு என்னை நேரில் வந்து சந்தியுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது.
இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.
அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.
அண்ணா சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு, தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஏதோ சாதித்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ, அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.