சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயர் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயரும் ஆவார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று, மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அதன்படி இன்று நடந்த மறைமுக தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி பதவியேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, 74-வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ஆர்.பிரியாவை (28) சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராகவும், 169-வது வார்டில் வென்ற மு.மகேஷ்குமார் துணை மேயர் வேட்பாளராகவும் திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று (4.3.2022) நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். மேயருக்கான அங்கியை சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார்.

சென்னையின் புதிய மேயர் பிரியாவுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை வழங்கினர்.

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியாவுக்கு 0001 என்ற எண்ணோடு அரசு சின்னம் பொறித்த முகப்போடு புத்தம் புதிய கார் அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயர் ஆவார். அதேநேரம் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயரும் ஆவார். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர்களிலேயே இளம் வயது சென்னை மேயரான ஆர்.பிரியா, வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

340 ஆண்டுகால சென்னை மேயர் வரலாற்றில் முதல் பட்டியலின பெண் மேயராக மிக இளம் வயது கொண்டவரை பொறுப்பில் அமர வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியல் இனத்தவர்களுக்கும் பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேயர்கள் விவரம்:

  1. சென்னை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஆர்.பிரியா போட்டியின்றி தேர்வு
  2. தாம்பரம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் வசந்தகுமாரி கமலகண்ணன் போட்டியின்றி தேர்வு
  3. திண்டுக்கல் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் இளமதி போட்டியின்றி தேர்வு
  4. திருப்பூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ந.தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு
  5. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் என்.பி ஜெகன் போட்டியின்றி தேர்வு
  6. சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஏ.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு
  7. கரூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு
  8. வேலூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சுஜாதா அனந்தகுமார் போட்டியின்றி தேர்வு
  9. கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் அனந்தகுமார் போட்டியின்றி தேர்வு. கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரானார் ஆட்டோ ஓட்டுநர் சரவணன்
  10. ஆவடி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஜி. உதயகுமார் போட்டியின்றி தேர்வு
  11. கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் கல்பனா போட்டியின்றி தேர்வு

12 . திருச்சி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மு.அன்பழகன் போட்டியின்றி தேர்வு

13 . காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் போட்டியின்றி தேர்வு

  1. கடலூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சுந்தரி போட்டியின்றி தேர்வு
  2. தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதன் போட்டியின்றி தேர்வு
  3. ஒசூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா போட்டியின்றி தேர்வு
  4. சிவகாசி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சங்கீதா இன்பம் போட்டியின்றி தேர்வு
  5. நாகர்கோவில் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மகேஷ் இன்பம் போட்டியின்றி தேர்வு
  6. மதுரை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் இந்திராணி போட்டியின்றி தேர்வு