பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் சிறப்பு குழு அளித்த பரிந்துரையை ஏற்று ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சுதந்திர தின உரையின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “”இந்த அரசு எப்போதும் தேசத்தின் மகள்கள், சகோதரிகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம்.
இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும்” என்று கூறியிருந்தார்.
முன்னதாக பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்து, அதற்கு ஜெயா ஜேட்லி தலைமை வகிக்கிறார். நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பெண்களின் திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தக்குழு பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21ஆக உயர்த்த பரிந்துரை செய்தது.
இந்நிலையில் பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை ஒன்றிய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் சட்டமாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.