ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் சித்ரா(வயது 28) என்பவரும் இடம்பெற்றுள்ளார்.
 
பி.டெக் முடித்துள்ள இவர், நேர்முக தேர்வில் 275-க்கு 206 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
 
இவரது தந்தை தியாகராஜன். ஓய்வு பெற்ற ரெயில்வே அலுவலர். தாயார் ஜானகி. சித்ரா, கடந்த 2012-ம் ஆண்டு படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
 
பணியில் இருந்து கொண்டே தேர்வை எதிர்கொண்ட அவர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்பு முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளார். இந்த சாதனை குறித்து அவர் கூறியதாவது:-
 
படித்து முடித்ததும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. படிப்பை முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்ததால் வேலையை விட்டு விட மனம் இல்லை. இதனால் வேலையில் இருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்க தொடங்கினேன்.
 
முழுநேரமாக படித்தால் மட்டுமே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும் என்று பலர் கூறினார்கள். ஆனால், வேலை பார்த்து கொண்டே என்னால் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
 
இதனால் வேலை பார்த்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வை எதிர்கொண்டேன். முதல் 3 முறை முதற்கட்ட தேர்வில் தோல்வி அடைந்தேன். இருந்தபோதிலும் நம்பிக்கையை விடவில்லை. அடுத்து 2 முறை முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வில் தோல்வி அடைந்தேன்.
 
ஆனாலும், விடா முயற்சியுடன் பயிற்சியை மேற்கொண்டேன். கடைசி வாய்ப்பாக 6-வது முறை தேர்வை எதிர்கொண்டேன். முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளேன்.
 
நேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள மனித நேய பயிற்சி மையத்தில் படித்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வின் போது நடத்தப்படும் நேர்முக தேர்வு போன்றே இங்கு தேர்வு நடத்தப்பட்டது. 8 முறை அதுபோன்று நடத்தப்பட்ட தேர்வில் கலந்துகொண்டேன்.
 
ஒவ்வொரு முறை தேர்வில் தோல்வி அடைந்த போதும் நான் சோர்ந்து விடாத வகையில் பெற்றோர் எனக்கு ஊக்கம் அளித்தனர். ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற பயிற்சி நிறுவனங்களில் படித்த ராகுல்தேவ் குப்தா என்பவர் எனக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.