தமிழ் சினிமாவில் விலங்குகளை மையப்படுத்தி அதிக படங்கள் எடுத்த பெருமை ராம.நாராயணனையே சேரும். ராம.நாராயணனுக்கு பிறகு தமிழில் விலங்குகளை மையப்படுத்திய படங்கள் குறைந்துவிட்டன.
தற்போது மீண்டும் விலங்குகளை மையப்படுத்திய படங்களை தயாரிக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படம் முழுக்க நாயகனோடு ப்ரூனோ என்ற நாய் கதாபாத்திரமும் பயணித்திருக்கும்.
இதேபோன்று, அடுத்து உருவாகிக் கொண்டிருக்கும் முழு நீள விலங்கு திரைப்படம் தும்பா. புலியை மைய்யப்படுத்தி அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் கனா படத்தின் மூலம் கவனம் பெற்ற தர்ஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். கலக்கு போவுது யாரு புகழ் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். இதன் ப்ரொமோஷன் வீடியோவில், இசை அமைப்பாளர் அனிருத்துடன் ஒரு புலியும் இடம்பெற்றிருந்தது.
இப்படத்தின் சிங்கிள் பாடலான ‘புதுசாட்டம்’ என்ற பாடல் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் வேகமாக தயாராகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தததை படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், கோடை விடுமுறையைக் குறி வைத்து படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படம் வெளியானால் தமிழில் உருவான முழு நீள புலிப்படம் என்ற பெருமையை தும்பா பெறும்.